கள்ளக்குறிச்சி
மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் சிகை அலங்காரம் செய்யாதீர்கள்
|புள்ளிங்கோ ஸ்டைல் கட்டிங்கால் ஒழுக்கம் குறைகிறது. மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் சிகை அலங்காரம் செய்யாதீர்கள் என்று முடிதிருத்துவோரிடம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய காலத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கற்ற முறையில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி திருத்தம் செய்கிறார்கள். அதாவது பாக்ஸ் கட்டிங், கிராஸ் கட்டிங், ஒன்சைடு கட்டிங், லைன் கட்டிங், வி கட், ஸ்பைக் என ஸ்டைலாக தலைமுடியை திருத்தம் செய்து கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதைப் பார்க்க முடிகிறது. இவ்வாறு வித்தியாசமாக முடிதிருத்தம் செய்து வரும் மாணவர்களிடம் ஒழுக்கம் குறைந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறது. மேலும் இதுபோன்று முடிதிருத்தம் செய்துவிட்டு வரும்போது, மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகிறது.
பெற்றோர்கள்கண்டுகொள்வதில்லை
இது குறித்து பெற்றோர்களும் சரிவர கண்டுகொள்வதில்லை. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் எவ்வளவு கூறியும், மாணவர்களின் இந்த 'ஹேர் ஸ்டைலை' மாற்ற முடியவில்லை. ஆசிரியர்களும் மாணவர்களை கண்டிக்க முடியாத சூழலில் உள்ளனர். எனவே கல்வியில் கவனம் செலுத்தும் வகையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். சீருடை மற்றும் சிகை அலங்காரம் ஒழுக்கமாக இருக்க அறிவுறுத்த வேண்டும் என பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பள்ளி ஆசிரியர்கள் முடிதிருத்துவோரிடம் மாணவர்களுக்கு புள்ளிங்கோ ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்யாதீர்கள் என்று வலியுறுத்தியும் வருகின்றனர்.
கோரிக்கை
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாநில இணை செயலாளர் கதிர்வேல் ஆகியோர் முடிதிருத்துவோர் நல சங்க மாவட்ட தலைவர் சங்கரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், புள்ளிங்கோ ஸ்டைல் கட்டிங்கால் மாணவர்களிடையே ஒழுக்கம் குறைகிறது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாக்ஸ் கட்டிங், கிராஸ் கட்டிங், ஒன்சைடு கட்டிங், ஸ்டைல் கட்டிங் என வித்தியாசமான முறையில் முடிதிருத்துவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.