கடலூர்
பெருமாள் ஏரியில் அதிக மண் அள்ளக்கூடாது:இழப்பீட்டு தொகையை ஒப்பந்ததாரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும்.அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு
|பெருமாள் ஏரியில் அதிக மண் அள்ளக்கூடாது, இழப்பீட்டு தொகையை ஒப்பந்ததாரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்காக மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி, அதிகமாக மண் அள்ளும் பணி நடப்பதாக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது பற்றி அகரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய லாரிகளை சிறை பிடித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அவரது அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க தலைவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அளவுக்கு அதிகமாக மண் எடுக்கக்கூடாது. ஏற்கனவே அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததற்கு இழப்பீட்டு தொகையை அரசுக்கு ஒப்பந்ததாரர்கள் செலுத்துவது என்றும், மேடாக இருக்கும் பகுதியில் மண் அள்ளுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததை கோட்டாட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதும் அவர்கள் கலைந்து சென்றனர்.