மதுரை
மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.1.81 கோடி நன்கொடை: அப்பள வியாபாரியை பாராட்டிய முதல்-அமைச்சர்...!
|மதுரையில் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.1.81 கோடி நன்கொடை வழங்கிய அப்பள வியாபாரி ராஜேந்திரனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் தத்தநேரி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 86). இவர் அப்பளம், வத்தல், வடகம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வியாபாரம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1.10 கோடி செலவில் 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை கட்டி கொடுத்துள்ளார்.
இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் ரூ.71.45 லட்சம் செலவில் 4 வகுப்பறைகள், ஆழ்துளை கிணறு ஒன்று, உணவு அருந்தும் இடம், கழிவறைகள் உள்ளிட்டவற்றை அமைத்துத் தந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.2 கோடி தருவதாக உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதுரை சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜேந்திரனை நேரில் அழைத்து பாராட்டினார். பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருவதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து, சால்வை அணிவித்தார். மேலும் அவருக்கு கலைஞரின் திருவுருவச் சிலையை வழங்கி பாராட்டினார்.