< Back
மாநில செய்திகள்
பணிப்பெண் மீது தாக்குதல்: எம்.எல்.ஏ. மருமகளின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை
மாநில செய்திகள்

பணிப்பெண் மீது தாக்குதல்: எம்.எல்.ஏ. மருமகளின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
24 Jan 2024 7:14 AM GMT

பாதிக்கப்பட்ட இளம்பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இ.கருணாநிதி. இவரது மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா. இதனிடையே, திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த ஆண்டு மாத சம்பளம் அடிப்படையில் ரேகா (வயது 18) என்ற இளம்பெண் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். பல மாதங்களாக ரேகா வீட்டு வேலை செய்துவந்த நிலையில் அவருக்கு பேசியபடி சம்பளத்தை கொடுக்காமல் ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினா துன்புறுத்தியுள்ளனர்.

மேலும், இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி, ஜாதி ரீதியிலும், ஆபாசமாகவும் பேசியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எம்.எல்.ஏ.வின் மருமகள் மெர்லினா அடித்து துன்புறுத்தியதில் ரேகாவின் தலை, முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டிருப்பது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மேலும், தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ரேகா நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திமுக எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா மீது வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் திமுக எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா இருவரும் தலைமறைவாகினர்.

இதையடுத்து தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினாவை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு முன் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ.வின் மருமகள் குடும்பத்தாரிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மெர்லினாவின் தாய், தந்தையிடம் காவல் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மெர்லினா எங்கே இருக்கிறார்?, சிறுமியை தாக்கியது ஏன்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பெங்களூரு சென்றுள்ள தனிப்படை போலீசார் மெர்லினாவின் உறவினர் இல்லத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்