ராமநாதபுரம்
மாணவர் விடுதியில் தரமான உணவு வழங்கப்படுகிறதா?
|மாணவர் விடுதியில் தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்று கலெக்டர் நேரில் ஆய்வு நடத்தினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட லாந்தை ஊராட்சியில் ஆதிராவிட நலத்துறையின் சார்பில் அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீரென்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாணவர்களிடம் அரசு அட்டவணையில் தெரிவித்துள்ளபடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகள் வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.
பின்னர் மாணவர்களுக்கான உணவு பொருட்களின் இருப்பு குறித்து பார்வையிட்டு தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். மாணவர்கள் பயன்பாட்டிற்கான சுகாதார வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என பார்வையிட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் பராமரித்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.
மாணவர்கள் தங்கியுள்ள அறைகளை பார்வையிட்டு தேவையான கட்டில் மற்றும் வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்பொழுது விடுதி அருகே விளையாட்டு மைதானம் அமைத்து தர மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மைதானம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மாணவர்கள் விடுதியில் உள்ள நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்தி பயன் பெற வேண்டும். விளையாட்டில் ஆர்வம் காட்டுவதுடன் நன்றாக படித்து தேர்வுகளில் வெற்றி பெற்றிட வேண்டுமென மாணவர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.