பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் ஆவணம் எழுதுபவர்கள் நுழையக் கூடாது - தமிழக அரசு எச்சரிக்கை
|சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுத்துறையின் கீழ் 581 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சமீப காலங்களாக ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் அத்துமீறல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறை தலைவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்து, ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"அலுவலக நிமித்தமாக சார்பதிவாளரால் அழைக்கப்பட்டால் தவிர ஆவணம் எழுதுபவர்கள் பத்திர பதிவு அலுவலகத்தில் நுழையக்கூடாது. அரசின் இந்த உத்தரவை சார்பதிவாளர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதனை மீறி சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் செயல்பாடோ, நடமாட்டமோ கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது உரிமம் ரத்து செய்யப்படுவதோடு இதனைக் கண்காணிக்க தவறும் சார்பதிவாளர்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை ஆவணம் எழுதுபவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை சார்பதிவாளர்கள் உறுதி செய்யவேண்டும். மாவட்டப்பதிவாளர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் தங்களது திடீர் ஆய்வுகளின் போது இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்திட வேண்டும்.
இந்த சுற்றறிக்கையினை ஆவணம் எழுதுவோர் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் விளம்பரப் படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது."
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.