< Back
மாநில செய்திகள்
24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்
வேலூர்
மாநில செய்திகள்

24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்

தினத்தந்தி
|
26 Oct 2023 10:10 AM IST

பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும் என கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

24 மணி நேரமும்...

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று பொன்னை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொன்னையாற்றின் குறுக்கே சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து, நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் தினமும் மாலை 6 மணிக்கு மேல் மருத்துவமனையில் டாக்டர்கள் இருப்பதில்லை. இதனால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் கடித்தால் சோளிங்கர், ராணிப்பேட்டை அல்லது வேலூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

புதிய சத்துணவுக் கூடம்

இதனை அடுத்து பொன்னை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். இப்பள்ளியில் சத்துணவுக்கூடம் போதிய வசதி இல்லாததால் புதிய சத்துணவுக்கூடம் மற்றும் கூடுதல் கழிவறைகள் வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு விரைவில் கட்டி கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் கொல்லப்பள்ளி ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பில் குளம் தூர்வாரப்படுவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் கூறினார். பின்னர் வள்ளிமலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஒன்றிய குழு உறுப்பினர் ரவி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், பெருமாள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்