திருநெல்வேலி
உடல் உறுப்பு தானம் செய்த வாலிபர் உடலுக்கு டாக்டர்கள் மரியாதை
|நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு தானம் செய்த வாலிபர் உடலுக்கு டாக்டர்கள் மரியாதை செலுத்தினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகவூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 35). இவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து அவரின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மாரியப்பனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து ஒப்புதல் அளித்தனர்.
உறவினர்களின் ஒப்புலுக்கு பின்னர் மாரியப்பன் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை திசு அறுவைசிகிச்சை மூலம் பிரித்து தானமாக பெறப்பட்டது. பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலையில் மதுரையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கல்லீரலும், 2 சிறுநீரகங்களில் ஒன்று மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றொன்று நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும், கண்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டது.
இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி மாரியப்பனின் உடலுக்கு மருத்துவக்கல்லூரி டீன் ரேவதிபாலன் மற்றும் டாக்டர்கள் மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து மொத்தம் 23 உறுப்புகள் மாற்று திசுகள் தானமாக பெறப்பட்டு உள்ளதாக மருத்துவக்கல்லூரி டீன் ரேவதிபாலன் தெரிவித்தார்.