திருநெல்வேலி
வாலிபரின் அரிய வகை நோய்க்கு சிகிச்சை அளித்து டாக்டர்கள் சாதனை
|நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் வாலிபரின் அரிய வகை நோய்க்கு சிகிச்சை அளித்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அரிய வகை நோய்
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 32). கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவருக்கு கை, கால்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்து பரிசோதனை செய்தனர்.
இதில் கிருஷ்ணமூர்த்தி 'குல்லியன் பேரி சின்ட்ரோம்' என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் 80 நாட்கள் தொடர் சிகிச்சை அளித்து பூரண குணமாக்கினர்.
இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் ரேவதி பாலன், பொது மருத்துவ துறை தலைவர் ராஜகோபால மார்த்தாண்டம் ஆகியோர் கூறியதாவது:-
சிறப்பு சிகிச்சை
இங்கு கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி சேர்க்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி 'குல்லியன் பேரி சின்ட்ரோம்' எனப்படும் அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இது வைரஸ் தாக்குதலால் ஏற்படக்கூடியது. 1 லட்சம் பேரில் ஒருவருக்கு வரும்.
இந்த நோய் முதலில் கால்களையும், அடுத்து கைகளையும் செயல் இழக்க செய்து, இறுதியில் சுவாசத்தையும் பாதிக்கும். இவருக்கு பிளாஸ்மா பெரசிஸ் என்ற உயர்ரக மருத்துவ சிகிச்சை 4 முறை அளிக்கப்பட்டும், முன்னேற்றம் ஏற்படவில்லை. நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் தேவைப்பட்டதால், அவரது தொண்டையில் சிறிய துளையிட்டு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.
பொது மருத்துவ துறை தலைவர் ராஜகோபால மார்த்தாண்டம் தலைமையில் டாக்டர்கள் ராஜேஷ், உதய்சிங், சரவணன், ரவிசங்கர், சங்கரன், ராஜ்கமல் பாண்டியன், காட்சன் ஆகியோர் கொண்ட குழுவினர் கூட்டு முயற்சியில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இயல்பாக சுவாசிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை சார்பில் தினமும் பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது அவராகவே நடக்கிறார். கை, கால்கள் நன்றாக செயல்படுகிறது.
மருத்துவ வரலாறு
இது மருத்துவ வரலாற்றில் மிக முக்கிய சாதனை ஆகும். இந்தியாவில் நாக்பூர் ஆஸ்பத்திரியில் 25 வயது பெண் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தார். ஆனால் அவர் வெளியே வரும் போது சக்கர நாற்காலியில் தான் சென்றார். ஆனால் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 80 நாட்கள் செயற்கை சுவாசத்தில் இருந்து சிகிச்சை பெற்ற வாலிபர் அவராகவே நடந்து செல்லும் அளவுக்கு குணமடைந்து விட்டார். அதிக நாட்கள் செயற்கை சுவாசத்தில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் முதல் நபர் இவர்தான்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தாய் நன்றி
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் தாய் நாகஜோதி கூறுகையில், ''என்னுடைய மகன் குவைத் நாட்டில் வேலை செய்து சொந்த ஊருக்கு வந்திருந்தான். அவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கோவில்பட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தோம். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். இங்கு டாக்டர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளித்து என்னுடைய மகனை எழுந்து நடக்க வைத்து விட்டார்கள். அவர்களுக்கு எங்களது குடும்பத்தினர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
பேட்டியின் போது ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் உடனிருந்தார்.