குழந்தையைக் காண வரும் முன்னாள் கணவருக்கு 'டீ' போட்டு கொடுக்கணுமா? - ஐகோர்ட்டு உத்தரவு
|குழந்தையைக் காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
குழந்தையைக் காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் - மனைவிக்கு பிறந்த குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு தனி நீதிபதி விசாரித்தார். அப்போது, பிரிந்து வாழும் தம்பதி தங்களை விருந்தினர்களாக கருதி குழந்தையுடன் சேர்ந்து அவர்கள் உணவருந்த வேண்டும் என்றும், முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும், குருகிராமில் வேலை பார்க்கும் முன்னாள் மனைவியை சென்னையில் தங்கியிருந்து, கணவன் குழந்தையை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தனி நீதிபதி, தனது அதிகார வரம்பை மீறி பிறப்பித்துள்ளார் எனத் தெரிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், குழந்தையை காண விரும்பினால் முன்னாள் கணவர், முன்கூட்டியே தகவல் தெரிவித்து, குருகிராம் சென்று சந்திக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.