< Back
மாநில செய்திகள்
தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?
கரூர்
மாநில செய்திகள்

தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?

தினத்தந்தி
|
4 Jan 2023 12:08 AM IST

நாம் அணியும் ஆடைகளே நமக்கு அடையாளம் தருகின்றன. நமது கலாசாரத்தை சொல்கின்றன. தமிழர்கள் என்பதை வேட்டி, சட்டைகளே வெளிக்காட்டுகின்றன.

வேட்டிக்கு உலக அங்கீகாரம்

உலக பாரம்பரியங்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட 'யுனஸ்கோ' அமைப்பு தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை நன்கு உணர்ந்து வேட்டிக்கு உலக அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது. 2016-ம் ஆண்டு அந்த அமைப்புதான் ஜனவரி 6-ந்தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது.

அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் வேட்டி அணிய வேண்டும் என்ற உணர்வு இளைய தலைமுறையினரிடம் மேலோங்கி வருகிறது. அதற்காக யுனஸ்கோ அமைப்பை பாராட்ட வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால்? இங்கிலாந்துக்காரர் சொல்லி வேட்டி சட்டையை களைந்து விட்டு பேண்ட் சூட்டுக்கு மாறிய நாம், அமெரிக்காவில் உள்ள நிறுவனம் சொல்லித்தான் மீண்டும் வேட்டியை அணிய வேண்டியது இருக்கிறதே என்பதுதான்!

சரி போகட்டும்! எப்படியேனும் நமது பண்பாடு பாதுகாக்கப்படுவது நல்லதுதானே?

அரசு ஊழியர்கள்

அன்றாட பணிக்கு பேண்ட்-சட்டையில் வரும் அரசு ஊழியர்கள் அன்றைய தினம் மட்டும் வேட்டி-சட்டையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போன்று சர்வதேச வேட்டி தினத்தன்று மட்டும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து வருவதற்கு கல்வி நிறுவனங்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கின்றன.

வேட்டி அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதோடு சர்வதேச வேட்டி தின கொண்டாட்டம் முடிந்து விடுகிறது. அப்புறம் அந்த வேட்டி, வீட்டு பிரோவின் ஓரத்தில் ஓய்வெடுக்கச் சென்று விடுகிறது.

எனவே சர்வதேச வேட்டி தினம் சம்பிரதாயத்திற்காக கடைப்பிடிக்கப்படுகிறதா? அல்லது இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய ஆடைகள் அணிய வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்துகிறதா? என்பது பற்றிய கருத்துகளை இதோ கீழே பதிவிட்டிருக்கிறார்கள் பாருங்களேன்:-

பண்பாட்டை மறந்துவிட்டனர்

கரூரை சேர்ந்த நாகராஜன்:- தமிழ்நாட்டிற்ெகன்று நிறைய பாரம்பரியங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று வெள்ளை வேட்டி- சட்டையாகும். வாழ்வின் முக்கிய நிகழ்ச்சியான திருமணம், திருவிழா, குடும்ப விழா என அனைத்து நிகழ்ச்சிகளிலும் வேட்டி, சட்டை முதலிடம் பிடிக்கும். ஜல்லிக்கட்டுக்காக மாபெரும் போராட்டம் நடத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்த நம் இளைஞர்கள் மத்தியில் நம்முடைய பாரம்பரிய உடையான வேட்டி மீது உள்ள பற்று குறைந்ததற்கு காரணம் என்ன என்று புரியவில்லை. நாகரிகம் என்ற பெயரில் நம் இளைஞர்கள் பண்பாட்டை மறந்துவிட்டனர். உலகையே உலுக்கிய கொரோனா மற்றும் டெங்கு போன்றவை நம் தமிழ் மண்ணில் தோற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழன் எதை செய்தாலும் அதில் உலக நன்மையே இருக்கும். நம் பண்பாட்டை பறைசாற்றும் வெள்ளை வேட்டி- சட்டை அணிவதை மீட்டெடுப்போம்.

பண்டிகைகளுக்கு மட்டுமே...

குளித்தலையை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ்:- தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிவது என்பது பெரியவர்களும், அரசியல் பிரமுகர்களுமே அணிந்து வருகின்றனர். ஆனால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் பெரும்பாலும் வேட்டி அணிவதில்லை. வேட்டியை விட பேண்ட் அணிவது சுலபமாகவும், சவுகரியமாகவும் உள்ளது. அப்படியே இளைஞர்கள் வேட்டி அணிவது என்றாலும் கல்லூரி விழாக்கள் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு மட்டுமே அணிகின்றனர். அதிலும் கிராமப்புற இளைஞர்களே அணிவது உண்டு. நகர்ப்புற இளைஞர்கள் வேட்டி அணிவதை விரும்புவதில்லை.

'டிப்-டாப்' உடை

சின்னமலை பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன்:- நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப புது, புது மாடல்களில் ஆடைகள் வருவதும் வழக்கமானதுதான். கல்லூரி மாணவர்களுக்கு 'டிப்-டாப்' உடை மீதுதான் அதிக கவனம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் கல்லூரி விழா, பொங்கல் பண்டிகை போன்ற நம்முடைய பாரம்பரிய நிகழ்ச்சிகளின்போது வேட்டி-சட்டை அணிய வேண்டும் என்ற எண்ணமும் இளைய தலைமுறையினரிடம் மேலோங்கி வருவதையும் மறுக்க முடியாது. நமது பாரம்பரிய உடையை வாரத்தில் ஒரு நாள் அணிவதை வழக்கமாக்கிக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

விதவிதமான ஆடைகள்

நொய்யல் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி:- கடந்த காலங்களில் தீபாவளி, பொங்கல், திருமணம், காதுகுத்து உள்ளிட்ட பல்வேறு விசேஷங்களில் ஆண்கள் வேட்டியை அணிந்து வந்தனர். ஆனால் தற்போது பல்வேறு நிறுவனங்கள் விதவிதமான ஆடைகளை விற்பனைக்கு கொண்டு வருவதால் வேட்டியை யாரும் அணிவது இல்லை. எனவே பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலாவது இளைஞர்கள் வேட்டி-சட்டையை அணிய முன்வரவேண்டும்.

தாலிகட்டும் நேரம்...

வெள்ளியணையை சேர்ந்த இளங்கோவன்:- தற்போது திருமணத்தன்று தாலி கட்டும் நேரத்தில் மட்டுமே மணமகன் வேட்டியும், மணமகள் சேலையும் அணிகிறார்கள். அதன்பின்னர் அவர்கள் விரும்பி அணியும் உடைக்கு மாறி விடுகின்றனர். வெள்ளை வேட்டியும், பட்டு சேலையும் உடுத்தி பவனி வந்தவர்கள் தங்களது உடல்வாகுக்கு பொருந்தாத பல்வேறு உடைகளை அணிந்து உலாவுவதை பார்க்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. ஆனால் இன்றைய இளைஞர்களிடையே வேட்டி கட்டும் ஆர்வத்தை தூண்டும் வகையில் வேட்டி அணியும் வாரம் கொண்டாடப்படுவது, வேட்டி அணிவதின் நன்மைகளை இளைஞர்கள் உணரும் வகையில் உள்ளது. நமது கலாசாரத்தை பேணி பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். அதை உணர்ந்து நமது கலாசாரத்தை வருங்கால சந்ததிகளுக்கு கொண்டும் செல்லும் விதமாக முக்கிய பண்டிகை நாட்களில் வேட்டி அணிய இன்றைய இளைஞர்கள் முன் வர வேண்டும்.

ஊக்கப்படுத்த வேண்டும்

வேலாயுதம்பாளையம் ஜவுளிக்கடைக்காரர் கோபி:- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் இளைஞர்கள் அதிகளவில் புது வேட்டி, சட்டையை அணிந்து திருவிழாவை கொண்டாடி வந்தனர். ஆனால் தற்போது வேட்டிகளை உடுத்துவது குறைந்துவிட்டது. மேலும் இளைஞர்கள் நவீன உடைகளையே அதிகமாக விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் வேட்டி விற்பனையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இளைஞர்கள் வேட்டி அணிந்து விழாவை கொண்டாட ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் அதிகளவில் வேட்டியை பயன்படுத்துவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேட்டி வாரம்

ஜனவரி 6-ந்தேதி சர்வதேச வேட்டி தினம் என்றாலும் தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை வேட்டி வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. வேட்டி விற்பனையை அதிகரிக்க ஜவுளி நிறுவனங்கள் கவர்ச்சிக்கர சலுகைகளை அறிவித்து உள்ளன.

இளைஞர்கள் சிரமமின்றி அணியும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி, பாக்கெட் வைத்த வேட்டி என்று வேட்டியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

நாம் பாரம்பரிய உடைகளை தினமும் அணியாவிட்டாலும்கூட விழாக்காலங்களிலும் முடிந்தால் வாரத்தில் ஒரு தினமேனும் அணிவோம் என்றால் நெசவாளர்கள் மட்டும் அல்ல நமது கலாசாரமும் பாதுகாக்கப்படும் என்பதில் மாற்றுக் இருக்க முடியாது.

மேலும் செய்திகள்