மதுரை
சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் தனி அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுவதா?நீதிபதிகள் கேள்வி
|சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் தனி அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுவதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம், பெர்டின் ராயன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை-தூத்துக்குடி இடையிலான தேசிய நெடுஞ்சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து உள்ளனர். எனவே வாகைக்குளம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த தேசிய நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்கும் வரை, வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாமல் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர். இதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது? சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் தனி அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுவதா? என கேள்வி எழுப்பினர்.
விசாரணை முடிவில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை குறித்து தேவைப்பட்டால் இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர்கள் அவமதிப்பு வழக்கு தொடரலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தி, இதுதொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்துவதாக உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.