< Back
மாநில செய்திகள்
அரசு குழு நிர்ணயித்த கட்டணத்தை, தனியார் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்கின்றனவா? அரசு கண்காணிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி
மாநில செய்திகள்

அரசு குழு நிர்ணயித்த கட்டணத்தை, தனியார் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்கின்றனவா? அரசு கண்காணிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

தினத்தந்தி
|
4 Nov 2022 10:36 PM IST

அரசு குழு நிர்ணயித்த கட்டணத்தை, தனியார் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்கின்றனவா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிக்க ஒதுக்கீடு பெற்ற மாணவர்களிடம், தமிழகத்தில் கட்டணக்குழு நிர்ணயித்ததை விட ரூ. 3 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதாகப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த ஆண்டு அனைத்து சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான கட்டணக்குழு உயர்த்தியது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி மற்றும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை செலுத்துகின்றனர்.

தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு ஆண்டு கட்டணம் ரூ.5.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் தேர்வுக்குழு அல்லது கட்டணக் குழுவிடம் புகார் அளிக்கலாம் என தேர்வுக்குழு செயலர் தெரிவித்திருந்தார். எனினும், கூடுதல் தொகையைச் செலுத்த தனியார் மருத்துவக்கல்லூரிகள் நிர்ப்பந்திப்பது பெற்றோரை வேதனையடையச் செய்துள்ளது. ரூ. 5 லட்சம் தான் செலவாகும் என்று நினைத்த பெற்றோரிடம், கூடுதல் கட்டணம் செலுத்தச் சொல்வது எந்த வகையில் நியாயம்?

சுயநிதி கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்படுகின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணம் வரை வசூலிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இது தொடர்பான வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் மாணவர்களிடம் கூடுதலாகப் பணம் கேட்பதால், பல மாணவர்களுக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் அதிக கட்டணம் காரணமாக படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த மருத்துவக்கல்லூரி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. எனினும், இங்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சமும், பல் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமும் வசூலிக்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு இந்த கல்லூரியை அரசு ஏற்றது. அதன்பிறகு கட்டணத்தைக் குறைப்பதாக அரசு அறிவித்தது. இதுவரை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுக்கு முட்டுக்கட்டை போடும் நீட் தேர்வையும் தாண்டி, தமிழக மாணவர்கள் கஷ்டப்பட்டு மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெறுகிறார்கள். அவர்களில் பலர் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

எனவே, அவர்களது எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தையே, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்க வேண்டும். அதேபோன்று, தமிழக அரசு குழு நிர்ணயித்த கட்டணத்தை, சுயநிதி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வசூலிக்கின்றனவா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்