நீலகிரி
பழுதான கட்டிடங்களை பயன்படுத்த கூடாது
|மழைக்கால நிவாரண முகாம் அமைக்க பழுதான கட்டிடங்களை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
மழைக்கால நிவாரண முகாம் அமைக்க பழுதான கட்டிடங்கள் பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டம்
நீலகிரியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கி பேசியதாவது:-
மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளை 42 மண்டல குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். மீட்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பதை கள ஆய்வு செய்து, உறுதி செய்ய வேண்டும். சாலையோரத்தில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். மண் சரிவு ஏற்படும் பகுதிகளில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மருந்து, மாத்திரைகள்
அவசர காலத்தில் பயன்படுத்தும் கருவிகள் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மழைநீர் கால்வாய்களை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை போதிய அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
தேவைப்படும் பட்சத்தில் அவசர கால ஊர்திகளை இயக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு வழங்க அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
அறிக்கை
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பயிர்களை உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். மின்கம்பங்கள், மின்மாற்றிகள் பழுது ஏற்பட்டால், உடனடியாக சரி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும். பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பழுதடைந்திருந்தால், அதனை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.