வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்களை அமைக்க வேண்டாம் - அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவு
|பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றி புதிய மின் கம்பங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
சாலைகளின் ஓரங்களில் அமைக்கப்படும் மின்கம்பங்களை வேகத்தடைகளுக்கு அருகில் அமைக்காமல் சற்று தள்ளி பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மின்சார வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றி புதிய மின் கம்பங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அகற்றப்பட்ட பழைய மின்கம்பங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும், வேகத்தடைக்கு அருகே இருக்கும் மின்கம்பங்களை சற்று தள்ளி அமைக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்கம்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.