பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல்
|மாணவர்கள் ஓரளவு விடையளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்ற நிலையில் 11ஆம் வகுப்புக்கு பொது தேர்வு மே 9-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று தொடங்கியது. நேற்று முன்தினம் நிறைவடைந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்ட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும்,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.