< Back
மாநில செய்திகள்
புதிதாக டாஸ்மாக் கடை, பார் திறக்க அனுமதிக்க கூடாது
திருச்சி
மாநில செய்திகள்

புதிதாக டாஸ்மாக் கடை, பார் திறக்க அனுமதிக்க கூடாது

தினத்தந்தி
|
31 May 2022 2:43 AM IST

ஸ்ரீரங்கத்தில் புதிதாக டாஸ்மாக் கடை, பார் திறக்க அனுமதிக்க கூடாது என்று பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி, மே.31-

ஸ்ரீரங்கத்தில் புதிதாக டாஸ்மாக் கடை, பார் திறக்க அனுமதிக்க கூடாது என்று பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

287 மனுக்கள் பெறப்பட்டன

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடந்தது. வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் சாதிச்சான்று, இதரச்சான்றுகள், திருமண உதவித்தொகை உள்ளிட்ட 287 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் பா.ஜ.க. ஸ்ரீரங்கம் மண்டல் தலைவர் சதீஷ்குமார் கொடுத்த மனுவில், திருச்சி திருவானைக்காவல், சென்னை டிரங்க் ரோட்டில் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகம் எதிரே புதிதாக டாஸ்மாக் கடை, பார் திறக்க முயற்சி நடக்கிறது. பொதுமக்கள் வந்து இறங்கும் பஸ் நிறுத்தம் மற்றும் பன்மாடி குடியிருப்புகள் உள்ளதால் பல்வேறு இன்னல்கள் ஏற்படும். எனவே, டாஸ்மாக் கடை, பார் திறக்க அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

வணிகர் குறைதீர்க்கும் கூட்டம்

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் சார்பில் தலைவர் செந்தில்குமார் தலைமையில் திரளானவர்கள் மனு கொடுத்தனர். அதில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தொகுதிகளின் கிராமப்புற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்கப்படும் நலத்திட்டங்களை எளிதில் கிடைக்க வேண்டி, மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமையில் நடத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஜனநாயக சமூக நலக்கூட்டமைப்புஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் கொடுத்த மனுவில், திருச்சி-கரூர் மார்க்கத்தில் செல்லும் தடம் எண்: டி.என்.-47/1805 என்ற தனியார் பஸ், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.55 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால், அதை மீறி பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மகப்பேறு வளாகத்தில் குடிநீர் இல்லை

திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை இணை செயலாளர் கிரிஜா கொடுத்துள்ள மனுவில், திருச்சி அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டிகள், தண்ணீர்சுத்திகரிப்பான் உள்ளிட்டவை பராமரிப்பு இன்றி உள்ளது. குடிதண்ணீரும் இல்லை. குடிநீர் தேவையென்றால், அருகில் உள்ள கடைக்கு சென்று ஏழை, எளியவர்கள் பாட்டில் தண்ணீர் காசு கொடுத்துதான் வாங்குகிறார்கள். எனவே, ஆஸ்பத்திரி நிர்வாகம் தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நண்பருடன் பழக சொன்ன கணவர்

சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண் கொடுத்த மனுவில், துறையூர் பகுதியை சேர்ந்த எனது கணவர், அவரது நண்பருடன் சேர்ந்து சென்னையில் உள்ள வீடு மற்றும் திண்டிவனத்தில் உள்ள 5 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துகளுக்கான பத்திரத்தை அபகரித்தார். மேலும் தனது 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்று துறையூரில் உள்ள அம்மா வீட்டில் வைத்துள்ளதாகவும், சொத்து பத்திரம், குழந்தைகளை கேட்டால் நண்பனுடன் பழகுமாறு வற்புறுத்துகிறார். ஆசை வார்த்தை கூறி நல்லவர் போல் நடித்து தன்னுடைய சொத்துக்களையும் குழந்தைகளையும் அபகரித்த கணவர் மற்றும் அவரது நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து தலைவர் மீது புகார்

தொட்டியம் தாலுகாவுக்குட்பட்ட முருங்கை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கருப்பையா, உறுப்பினர்கள் கொடுத்த மனுவில், முருங்கை ஊராட்சியில். பதவி ஏற்ற நாள் முதல் தலைவரின் கணவர் ஊராட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஊராட்சிகூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாக்களில் அவரை முன்னிலை படுத்திக்கொள்கிறார். ஒப்பந்ததாரர்களிடம் அதிகப்படியான கமிஷனை பெற்று கொண்டும், தானே சுயமாக தரமற்று பொருட்களை கொண்டு பணியினை செய்கிறார். அதனால் நிதி இழப்பும், மோசடியும் நடைபெறுகிறது. இந்த மோசடிகளை கண்டித்தாலும் கேட்க மறுக்கிறார். எனவே, ஊராட்சியின் வரவு- செலவு கணக்குகளை முறையாக ஆய்வு செய்து தலைவர் மற்றும் அவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்