பெரம்பலூர்
காட்டுப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டமா?
|காட்டுப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டமா? என்பது பற்றி வனத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
குன்னம்:
குன்னம் அருகே கொட்டரை, ஆதனூர், மூங்கில்பாடி ஆகிய 3 கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், புத்தூர் காட்டுப்பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் தென்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலானது. இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் உள்ளிட்ட குழுவினர் ஆதனூர், கொட்டரை, மூங்கில்பாடி கிராமங்களில் கடந்த 10 நாட்களாக தேடி வருகின்றனர். இதில் சிறுத்தையின் கால் தடங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து சிறுத்தை அப்பகுதிக்கு வந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்த தகவல் தவறாக பரப்பப்பட்ட வதந்தி என்று கிராம மக்களிடம் விளக்கி கூறிய வனத்துறையினர் சிறுத்தை, நாய் ஆகியவற்றின் காலடி தடங்களின் படங்களை காட்டி, அவற்றை ஒப்பிட்டு தெளிவுபடுத்தினர்.
மேலும் சிறுத்தை இருப்பதாக கூறி வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், சிறுத்தையை பார்த்தவர்கள் வன துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.