< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் டிரைவர்கள் பஸ்களை இயக்குகிறார்களா?
கடலூர்
மாநில செய்திகள்

குடிபோதையில் டிரைவர்கள் பஸ்களை இயக்குகிறார்களா?

தினத்தந்தி
|
10 July 2023 12:33 AM IST

கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து குடிபோதையில் டிரைவர்கள் பஸ்களை இயக்குகிறார்களா? என்று போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தினர்.

அபராதம்

கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்களை சிலர் அதிவேகமாகவும், குடிபோதையில் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி வருவதாகவும் புகார்கள் வந்தது. இதையடுத்து அவர்களை சோதனை செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் கடலூர் பஸ் நிலையத்தில் சோதனை செய்து, குடிபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க டிரைவர்களுக்கு அறிவுறுத்தினர்.

சோதனை

இந்நிலையில் நேற்று காலை மீண்டும் கடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கடலூர் பஸ் நிலையத்தில் திடீரென சென்று சோதனை செய்தனர். அப்போது, பஸ்சை ஓட்டி வந்த தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களிடம் மது சோதனை கருவி மூலம் அவர்கள் மதுபோதையில் பஸ்சை இயக்குகிறார்களா? என்று சோதனை செய்தனர். அதில் யாரும் சிக்கவில்லை.

அதையடுத்து ஓட்டுனர் உரிமம் உள்ளதா? என்றும், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டு உள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் இந்த தொடர் நடவடிக்கை பஸ் டிரைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்