< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதா?

தினத்தந்தி
|
20 Sept 2023 1:54 AM IST

உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதா? என இல்லத்தரசிகள் ஆவேசம் அடைந்தனர்.

கலைஞர் உரிமைத்தொகைத்திட்டத்தின் மூலம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. அண்ணா பிறந்தநாளான கடந்த 15-ந் தேதி, காஞ்சீபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்தத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதன் மூலம் மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு தலா ரூ. 1,000 வீதம் வங்கிகள் மூலம் அனுப்பப்பட்டது.

இதுகுறித்த தகவல்கள் பயனாளர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. இதனை பார்த்ததும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சில பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். காரணம் அவர்கள் வங்கிக்கணக்குகளில் பல்வேறு காரணங்களுக்காக அரசு போட்ட ரூ.1,000-த்தில் இருந்து சிறிய தொகை பிடித்தம் செய்யப்பட்டு இருந்தது. வங்கிகள் இவ்வாறு பிடித்தம் செய்வது சரியல்ல. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் ஆவேசம் அடைந்து இருக்கிறார்கள்.

பாதி தொகை கிடைத்தது

இதுகுறித்து இல்லத்தரசிகள், வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

விளாமரத்துபட்டி முத்துமாரி:-

தமிழக அரசு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வங்கியில் எனது கணக்கில் பணம் எதுவும் இல்லாததால் ரூ.500 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

முழு பணமும் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் பாதி தொகை தான் கிடைத்தது. வங்கி பிடித்தம் செய்வது குறித்து சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும்.

ஏமாற்றம்

காரியாபட்டியை சேர்ந்த சக்திகாளி:- என்னுடைய வங்கி கணக்கிற்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வந்துள்ளது. ஆயிரம் ரூபாய் வந்த பின்பு மறுநாள் சென்று பணத்தை வங்கியில் எடுக்க சென்றபோது ரூ.570 வங்கியில் சர்வீஸ் சார்ஜ் என்று பிடித்தம் செய்யப்பட்டு விட்டது என்று எனக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை முழுமையாக எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

வங்கி சென்று ரூபாயை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன்.

விதிமுறைகளை தளர்த்த வேண்டும்

விருதுநகரை சேர்ந்த இல்லத்தரசி தனலட்சுமி:-

தமிழக அரசு பெண்களின் உரிமை தொகை என்று மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிலையில் அதுவும் அனைவருக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக வங்கிகள் மூலம் அனுப்பும் நடைமுறையை பின்பற்றுகிறது. ஆனால் வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை என்ற காரணத்தை கூறி உரிமை தொகையிலிருந்து பிடித்தம் செய்யும் நிலை உள்ளது.

இது தவிர்க்கப்பட வேண்டும். வங்கி நிர்வாகம் உரிமைத்தொகை வாங்கும் மகளிர் நிலையை கருத்தில் கொண்டு பூஜ்யம் இருப்பு கணக்கு தொடர அனுமதிக்க வேண்டும். அதன் மூலமே உரிமைத்தொகை பெறும் அனைத்து மகளிரும் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாயை முழுமையாக பெறும் வாய்ப்பு ஏற்படும். இதற்காக வங்கிகள் விதிமுறைகளை தளர்த்தி ஏழை, எளிய மகளிருக்கு உதவ வேண்டியது அவசியம் ஆகும்.

வங்கிகள் நடவடிக்கை

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தில் மாநில பொதுச் செயலாளர் டி.ரவிகுமார் கூறும் போது, தமிழ்நாடு அரசு ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு உரிமைத்தொகைத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் இந்தப்பணத்தை பெண்கள் எடுக்க முயலும் போது பலவிதமான பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக கணிசமான எண்ணிக்கையிலான பெண்களின் கணக்குகளிலிருந்து அவர்களுக்கு சேர வேண்டிய ஆயிரம் ரூபாயில் பெரும்பாலான தொகையோ, முழுவதுமோ அபராதத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

இது முழுவதும் தவறான நடவடிக்கையாகும். 2018-ம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடி சாமான்ய மக்களிடமிருந்து அபராதக் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகள் உடனடியாக இந்த நலத்திட்டத்திலிருந்து பிடித்தம் செய்வதை நிறுத்த வெண்டும். அரசு அறிவித்துள்ள இந்த நலத்திட்டம் முழுமையாக உரியவருக்குச் செல்ல வங்கிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிக்கணக்கு மாற்றப்படும்

தமிழக அரசு அதிகாரிகள் கூறும் போது, 'கலைஞர் உரிமைத் தொகை பயனாளர்கள் பெற்ற கடன் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியதற்கான கட்டணம் உள்ளிட்ட சேவை கட்டணம், வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பு இல்லாதது போன்ற காரணத்திற்காக சிலருடைய கணக்குகளில் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அரசு சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதனையும் மீறி வங்கிகள் பயனாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை பிடித்தம் செய்தால் பயனாளர்களின் கணக்கு பரிவர்த்தனைகள் வேறு வங்கிக்கு மாற்றம் செய்யப்படும். இதுதொடர்பாக பாதிக்கப்படும் இல்லத்தரசிகள், முதல்வரின் முகவரி உதவி மையத்தின் எண் 1100-ல் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்