வேலூர்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 20,858 பேர் எழுதுகின்றனர்
|வேலூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 20,858 பேர் எழுத உள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 20,858 பேர் எழுத உள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (நேர்முக தேர்வு பதவிகள் மற்றும் நேர்முக தேர்வு அல்லாத பதவிகள் - குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தத்தில் 77 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. வேலூர் தேர்வு மையத்தில் 15,612 பேர், குடியாத்தம் தேர்வு மையத்தில் 5,246 பேர் என மொத்தம் வேலூர் மாவட்டத்தில் 20,858 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 77 முதன்மை கண்காணிப்பாளர்களும், 1,000-க்கும் மேற்பட்ட அறை கண்காணிப்பாளர்களும் ஈடுபட உள்ளனர். தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேர்வு கூடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு, குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர், கைக்கெடிகாரம், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை தேர்வு கூடத்துக்கு கொண்டு செல்ல கூடாது. தேர்வு கூடத்தில் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.