< Back
மாநில செய்திகள்
மேலும் 5 பேரிடம்டி.என்.ஏ. பரிசோதனை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மேலும் 5 பேரிடம்டி.என்.ஏ. பரிசோதனை

தினத்தந்தி
|
13 Oct 2023 12:12 AM IST

வேங்கைவயல் வழக்கில் மேலும் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்தது.

வேங்கைவயல் வழக்கு

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த நபர்களை கைது செய்வதற்காக அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க வேங்கைவயல், இறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனையை கோர்ட்டு அனுமதியுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 25 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளன. அவை சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

5 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை

இந்த வழக்கில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசாா் அனுமதி பெற்றனர். இதில் இறையூர் பகுதியை சோ்ந்த 4 பேர், வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதில் ஒருவர் சிறுவன் ஆவார். இந்த நிலையில் கோா்ட்டு அனுமதி பெற்ற நிலையில் சிறுவன் உள்பட 5 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. ஒருவர் உடல் நலக்குறைவால் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரவில்லை. பரிசோதனைக்கு வந்த மற்ற 5 பேரிடமும் ரத்த மாதிரியை மருத்துவ குழுவினர் சேகரித்தனர்.

தடயவியல் ஆய்வகம்

இந்த ரத்த மாதிரி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு அதன்பின் சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அனுப்பி வைக்கப்படும். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் டி.என்.ஏ. பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் கிடைக்கும் பரிசோதனை முடிவுகள், குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தம், தண்ணீரின் பரிசோதனை முடிவுகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதுடன் ஒப்பிடப்படும். அதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொள்வார்கள். கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்