தேர்தல் வெற்றிக்கு பின் மக்களுக்கு திமுக தரும் பரிசு மின்கட்டண உயர்வா? - தமிழிசை கேள்வி
|மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டுமென தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டனத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மின்கட்டண உயர்வு குறித்து தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்ததரராஜன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா? அடுக்குமாடி குடியிருப்பு முதல் ஏழை எளிய மக்கள் வரை வாக்களித்தவர்களுக்கும்,வாக்கு அளிக்காதவர்களுக்கும் பரிசா இந்த மின் கட்டண உயர்வு..
சொன்னதை செய்யாமல்.... சொல்லாத மின் கட்டண உயர்வை வாக்களித்த மக்களுக்கு பரிசளித்ததுதான் திராவிட மாடல்.... விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் திராவிட மாடல்... ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்..."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.