தேர்தல் நேர்மையான முறையில் நடந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் - அன்புமணி ராமதாஸ்
|பணம், அதிகாரத்தை வைத்து திமுக பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சென்னை,
நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அன்னியூர் சிவா, 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்து அவர் பேசியதாவது;
"விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பாமகவுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. பணம், அதிகாரத்தை வைத்து திமுக பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல. விக்கிரவாண்டியில் ரூ.6,000 பணமும், ரூ.4,000-திற்கு பொருளும் திமுக கொடுத்திருக்கிறது. 3 தவணையாக வாக்காளர்களுக்கு திமுக பணத்தை கொடுத்துள்ளது.
விக்கிரவாண்டியில் அவ்வளவு நடந்தும் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையம் இருக்கிறதா? பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் தந்து இடைத்தேர்தலை திமுக ஜனநாயக கேலிக்கூத்தாக்கிவிட்டது. 33 அமைச்சர்கள், 30 எம்.பி.க்கள் உள்ளிட்டோர் விக்கிரவாண்டியில் முகாமிட்டு பணம் தந்தனர்.
சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இடைத்தேர்தலுக்காக திமுக செலவிட்டுள்ளது. பணம், பொருட்கள் கொடுத்தது, பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லையா? திமுகவுக்கும் சமூகநீதிக்கும் சம்பந்தம் கிடையாது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும். இந்த வெற்றி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது?"
இவ்வாறு அவர் பேசினார்.