விழுப்புரம்
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் தி.மு.க. அரசுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்
|அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் தி.மு.க. அரசுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று மரக்காணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசினார்.
பிரம்மதேசம்
கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மீன்பிடிதுறைமுகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தவறிய மற்றும் கூனிமேட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்த தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, விழுப்புரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மரக்காணம் பஸ் நிலையம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்.பி. தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. மீதான காழ்ப்புணர்ச்சி
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரம் மீனவ குடும்பத்தினர் 4 ஆயிரம் மீன்பிடி படகுகளை நிறுத்த முடியாமலும், பராமரிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னைக்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் தான் மீன்பிடிதுறைமுகம் உள்ளது. இதற்கு இடையில் வேறு எங்கும் துறைமுகம் இல்லை.
எனவேதான் மரக்காணம் அழகன்குப்பம் கிராமத்தில் ரூ.235 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இது அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதால் வேறு ஒருவரைக் கொண்டு வழக்கு போட்டு கடல் வளங்கள் பாதிக்கப்படும் என்று கூறி அ.தி.மு.க. மீதான காழ்ப்புணர்ச்சியால் இந்த திட்டத்தை தி.மு.க. நிறுத்தியுள்ளது.
சட்டரீதியாக ஏன் எதிர்கொள்ளவில்லை?
எந்த திட்டம் போட்டாலும் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் என்ன பயன் கிடைக்கும் என்று தான் தி.மு.க. அரசு நினைக்கிறது. கடலில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி பெறும் தி.மு.க. அரசு மீன்பிடி படகுகளை நிறுத்தும் இடத்துக்கான கட்டுமானப்பணியை தொடங்க சட்டரீதியாக ஏன் எதிர்கொள்ளவில்லை?
அமைச்சராக இருக்க தகுதி இல்லாதவர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு கச்சத்தீவு வரலாறு தெரியுமா?. தாத்தா தாரைவார்த்து கொடுத்த வரலாறு தெரியுமா?. தி.மு.க.வில் தொண்டர்கள் அடிமைகளாக உள்ளனர்.
ஒவ்வொரு மதத்திலும் நல்ல விஷயங்கள் உள்ளன. எனவே மதங்களை கொச்சைப்படுத்தும் வேலையை உதயநிதி ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பாடம் புகட்டப்படும்
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு விழுப்புரத்தில் அ.தி.மு.க. கொண்டு வந்த பல்கலைக்கழகத்தை மூடிவிட்டனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கூனிமேட்டில் ரூ.1,500 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் தி.மு.க. ரத்து செய்துவிட்டது. இப்படி அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் தி.மு.க. அரசுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அர்ஜுனன், சக்கரபாணி, ஒன்றிய செயலாளர்கள் ரவிவர்மன், நடராஜன், புலியனூர் விஜயன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்து, மேற்கு ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ், மீனவரணி கூட்டுறவு சங்க தலைவர் சுகுமாரன், கிழக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கந்தன், கிளை செயலாளர் அங்கப்பன், கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர்கள் சேகர், தனராஜ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.