கரூர்
பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை மாற்றக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள் ஆணையரிடம் புகார் மனு
|பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை மாற்றக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள் ஆணையரிடம் மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆணையரிடம் மனு
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி துணைத்தலைவர் தோட்டம் பஷீர் உள்ளிட்ட 18 தி.மு.க. கவுன்சிலர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர், சுயேச்சை கவுன்சிலர் என மொத்தம் 20 கவுன்சிலர்கள் நேற்று நகராட்சி ஆணையர் பால்ராஜை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பள்ளப்பட்டி நகராட்சி 27 வார்டுகள் கொண்டது. இதில் நகர்மன்ற பெண் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த முனவர்ஜான் பதவி வகித்து வருகிறார். நகராட்சிக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை முறையாக செய்யாமல், கழிவுநீர் வடிகால், மின்விளக்கு, சின்டெக்ஸ் தொட்டி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொள்முதல் செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனையின்றி தன்னிச்சையாக முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றி வருகிறார். எனவே அவரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பு
இந்த புகார் மனு குறித்து நகராட்சி தலைவர் முனவர்ஜான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளப்பட்டி நகராட்சியில் சுமார் ரூ.16 கோடியில் சாலை, சாக்கடை, மின்விளக்குகள், குடிநீர் என பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. நகராட்சி துணைத்தலைவராக உள்ள தோட்டம் பஷீர் என்பவர் தி.மு.க. நகர செயலாளராக பொறுப்பில் இருந்தவர். கவுன்சிலர்களுக்கான சீட் வாங்கி கொடுத்ததை சொல்லிக்காட்டி கவுன்சிலர்களை தவறாக இயக்குகிறார்.
என் மீது உள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக தலைவரை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் சொல்வதை கேட்கக்கூடிய பெண் கவுன்சிலர் ஒருவரை தலைவராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்.
கவுன்சிலர்களுக்கு தேவையான எல்லாவற்றையும், செய்து கொடுப்பதாகவும் கூறி தலைவராக இருக்கும் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. தலைவரை மாற்ற வேண்டும் என்ற நோக்கோடு பள்ளப்பட்டி நகராட்சியில் தலைவர் பதவிக்கான குதிரை பேரம் நடக்கிறது. என் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை முறியடித்து வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.