< Back
மாநில செய்திகள்
முத்துநாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம்:  தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் புறக்கணிப்பு
சேலம்
மாநில செய்திகள்

முத்துநாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம்: தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் புறக்கணிப்பு

தினத்தந்தி
|
2 Nov 2022 2:05 AM IST

முத்துநாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு முறையாக தகவல் தெரிவிக்காததால் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்,

கிராமசபை கூட்டம்

ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி மரத்து குட்டை பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் சாரதா ராஜா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் கோபால்சாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சக்தி, பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சமுத்து உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பாலசுப்ரமணியம், கிராம சபை கூட்டத்தின் பொருள்கள் குறித்து வாசித்தார்.

தி.மு.க. கவுன்சிலர் புறக்கணிப்பு

அப்போது தி.மு.க. கவுன்சிலர் கோபால்சாமி, கிராம சபை கூட்டம் பற்றி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கவில்லை எனவும், வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டி உரிய அறிவிப்பு செய்யவில்லை எனவும் புகார் தெரிவித்தார். இதேபோல் அங்கு வந்த பொதுமக்களில் சிலர், '9 ஆயிரத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ள ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெறுவது குறித்து உரிய முறையில் அறிவிப்பு செய்யவில்லை என்பதால் நூற்றுக்கணக்கானோர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். எனவே இந்த கூட்டத்தை கிராம மக்களுக்கு தெரிவித்து மற்றொரு தேதியில் நடத்த வேண்டும்' என தெரிவித்தனர்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் கிராம சபை கூட்டத்தை மாற்றி வைக்க முடியாது என தெரிவித்தனர். ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியம், அனைவருக்கும் கிராம சபை நடத்துவது குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது என்றார். இதனை ஏற்க மறுத்து தி.மு.க. கவுன்சிலர் கோபால்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து கிராம சபை கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

காமலாபுரம் ஊராட்சி

ஓமலூர் அடுத்த காமலாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பழனி கவுண்டர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் முருகன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் முருகன் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

காமலாபுரம் பிரிவு ரோட்டில் உள்ள 3 மது கடைகளும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 200 மீட்டர் ெதாலைவிற்குள் உள்ளது. மேலும் பஸ் நிறுத்தம் அருகில் உள்ளதால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், குழந்தைகள் அந்த மதுக்கடைகள் உள்ள பகுதியை கடந்து செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே இந்த மதுக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த கடைகள் இதுவரை அகற்றப்படவில்லை. எனவே கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் அவர் கையுடன் கொண்டு வந்த ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மதுக்கடைகள் அகற்ற கிராமசபை தீர்மான நகலை கிழித்தெறிந்தார். இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்