போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
|பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை,
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 76 கிலோ எடையிலான கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். முன்னதாக எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவசிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்துள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டு மக்களை நலமா என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்பது சரியா?.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையானது. தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டதாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். போதைப்பொருளை விற்போர் கைது செய்யப்படவில்லை; காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. முக்கியமான பிரச்சினையில் முதல்-அமைச்சர் பதிலளிக்காமல் ஆர்.எஸ்.பாரதி மூலம் பதிலளித்துள்ளார்.
கூட்டணி என்பது அந்தந்த தேர்தல் காலத்திற்கு ஏற்ப அமையும். எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிவு என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு; அதுவே தொண்டர்களின் உணர்வு. இவ்வாறு அவர் கூறினார்.