< Back
மாநில செய்திகள்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க. அரசுக்கு அதிகாரம் இல்லையா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
மாநில செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க. அரசுக்கு அதிகாரம் இல்லையா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

தினத்தந்தி
|
24 Dec 2023 3:15 AM IST

சமூகநீதியை நிலைநாட்ட, இழந்த உரிமையை நிலைநாட்ட நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சமூக நீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் கோவை போத்தனூர் சங்கமம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். 1931-ம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்துக்கொண்டு இப்போது இடஒதுக்கீடு அமல்படுத்தும் நிலை உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தி.மு.க. அரசு கூறுவது ஏமாற்றும் செயல். சமூக நீதி குறித்து அவர்களுக்கு பேச தகுதி கிடையாது. மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தலாம். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த இந்திய புள்ளியல் சட்டம் 2008-ன்படி மத்திய அரசு, மாநில அரசு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது.

இதன் அடிப்படையில்தான் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு கூடுதல் இடஒதுக்கீடு அங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இப்போது கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். கேரளாவில் ஆயத்தமாகி வருகிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தி.மு.க. அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது. 2010-ம் ஆண்டு தமிழ் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை 9-வது அட்டவணையில் கொண்டு வந்து ஜெயலலிதா இடஒதுக்கீடு பறிபோகாமல் பாதுகாத்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து இதுவரை எடப்பாடி பழனிசாமி எதுவும் கூறாமல் உள்ளார். சாதிகளின் பெயரால் ஓட்டுகளை வாங்கும் திராவிட கட்சிகள் சமூகநீதி கட்சிகள் என்று இனி கூற முடியாது. சமூகநீதியை நிலைநாட்ட, இழந்த உரிமையை நிலைநாட்ட நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தற்போது நாங்கள் அமைதியான முறையில் கேட்கிறோம். அடுத்த முறை அழுத்தமாக கேட்போம். சாலைக்கு வரும் நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தாது என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்