< Back
மாநில செய்திகள்
குமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல்:தி.மு.க. கூட்டணி 7 இடங்களை கைப்பற்றியது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல்:தி.மு.க. கூட்டணி 7 இடங்களை கைப்பற்றியது

தினத்தந்தி
|
24 Jun 2023 1:58 AM IST

குமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 7 இடங்களை கைப்பற்றியது. அ.தி.மு.க. 3 இடங்களையும், பா.ஜனதா 2 இடங்களையும் ெபற்றன.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 7 இடங்களை கைப்பற்றியது. அ.தி.மு.க. 3 இடங்களையும், பா.ஜனதா 2 இடங்களையும் ெபற்றன.

திட்டக்குழு தேர்தல்

குமரி மாவட்ட திட்டக்குழுவுக்கு ஊரக உள்ளாட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், நகர உள்ளாட்சி சார்பில் 7 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 42 வேட்பாளர்கள் பேட்டியிட்டனர்.

இதையடுத்து வாக்குப்பதிவு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கிலும், லூயி பிரெய்லி கூட்டரங்கத்திலும் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் ஊரக உள்ளாட்சி பதவிக்கு 5 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 11 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும், நகர்புற உள்ளாட்சி பதவிக்கு 7 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, மாநகராட்சியில் உள்ள 52 வார்டு கவுன்சிலர்கள், 4 நகராட்சியில் உள்ள 98 வார்டு கவுன்சிலர்கள், 51 பேரூராட்சியில் உள்ள 826 வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 987 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு காலை 9 மணிக்கே கவுன்சிலர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வரத்தொடங்கினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் 51 பேரூராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களும் வாக்குகளை பதிவு செய்தனர். இதேபோல நாகர்கோவில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் குளச்சல், பத்மநாபபுரம், கொல்லங்கோடு, குழித்துறை நகராட்சி, 11 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் நாஞ்சில் கூட்டரங்கத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

தேர்தலானது வாக்குச்சீட்டு முறையில் நடந்தது. வாக்களிக்க வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தங்களுக்கான அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்தனர். மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு தேர்தலில் வாக்களித்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4.45 மணி வரை நடந்தது.

தேர்தல் முடிவுகள்

வாக்குப்பதிவு முடிந்த பிறகு மாலை 5.35 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தல் அதிகாரி பாபு தலைமையில் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அவற்றின் விவரங்கள் வருமாறு:-

ஊரக உள்ளாட்சி உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட ஊராட்சி 11-வது வார்டு கவுன்சிலர் நீல பெருமாள் (7 வாக்குகள்), 10-வது வார்டு கவுன்சிலர் ஜான்சிலின் விஜிலா (7 வாக்குகள்), 3-வது வார்டு கவுன்சிலர் பரமேஸ்வரன் (6 வாக்குகள்), பா.ஜனதாவை சேர்ந்த 9-வது வார்டு கவுன்சிலர் சிவகுமார்(6வாக்குகள்), 5-வது வார்டு கவுன்சிலர் ராஜேஷ் பாபு (6 வாக்குகள்) ஆகிய 5 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நகர உள்ளாட்சி திட்டக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த நாகர்கோவில் மாநகராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் மேரி ஜெனட் விஜிலா (432 வாக்குகள்), உண்ணாமலைக்கடை பேரூராட்சி 11-வது வார்டு கவுன்சிலர் விஜிலா (422 வாக்குகள்), ஆற்றூர் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் சிவன் (391 வாக்குகள்), மண்டைக்காடு பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் ராபர்ட் கிளாரன்ஸ் (390வாக்குகள்), காங்கிரசை ேசர்ந்த அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் ஆதிலிங்க பெருமாள் (461 வாக்குகள்), உண்ணாமலைக்கடை பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் ஜான் தினேஷ் (417 வாக்குகள்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின் தாஸ் (368 வாக்குகள்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

முன்னதாக வாக்குப்பதிவையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெற்றி பெற்ற திட்டக்குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான பாபு சான்றிதழ் வழங்கினார். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று மாலை 5¼ மணிக்கு தொடங்கி இரவு 10¼ மணிக்கு முடிவடைந்தது.

மேலும் செய்திகள்