பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க - அண்ணாமலை
|“கச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க. தான்” என்று நெல்லை பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாத யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை நெல்லை மாவட்டத்தில் பாதயாத்திரையை தொடங்கினார்.
நெல்லை பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் பகுதியில் இருந்து பாத யாத்திரையை தொடங்கிய அண்ணாமலைக்கு கட்சியினர், பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சமாதானபுரம் ரவுண்டானா, மார்க்கெட், லங்கர்கானா சாலை வழியாக தொண்டர்களுடன் பாத யாத்திரையாக வந்த அவர், அங்குள்ள வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தெற்கு பஜார் வழியாக ராஜகோபாலசாமி கோவில் திடலை வந்தடைந்தார். அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு
மது ஆலைகளை தி.மு.க.வினர் நடத்துவதால்தான் மதுக்கடைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்போது, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஏன் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை?
நீட் தேர்வை தி.மு.க.வினர் எதிர்ப்பதற்கு காரணம், மாணவர்கள் மீதுள்ள அக்கறையில் இல்லை. மாறாக அவர்கள் மருத்துவ கல்லூரிகளை நடத்துவதால்தான் நீட் தேர்வை எதிர்க்கின்றனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 33 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 22 மருத்துவக் கல்லூரிகள் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதாகும். நீட் தேர்வு இருந்தால் இந்த கல்லூரிகளுக்கு மேலாண்மை இட ஒதுக்கீட்டில் இடம் வழங்க முடியாது என்பதால் அவர்கள் சொல்லித்தான் இந்த பிரச்சினையை எழுப்புகிறார்கள்.
கச்சத்தீவு
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க.தான். இதை ஆதாரத்துடன் கூறுகிறேன். விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந்தேதி முதல் இந்த திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரையிலும் வட்டி இல்லாமல் கடன் வாங்கிக் கொள்ளலாம். பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும். இதற்கு நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.