நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசிய தி.மு.க. நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
|பா.ஜ.க. நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசிய தி.மு.க. நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய சைதை சாதிக் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து நடிகை குஷ்பு வெளியிட்ட டுவீட்டுக்கு, டுவிட்டரிலேயே மன்னிப்பு கேட்டார் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி.
இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து நடிகைகள் மற்றும் பெண்களைப் பற்றி இழிவாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.