பெரம்பலூர்
'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
|‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி ஆகியவற்றின் சார்பில் ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் 'நீட்' தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கட்சியினர், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பப்படவுள்ள கடிதத்தில் கையெழுத்திட்டனர். மேலும் திருமண வரவேற்பு நடந்த ஒரு புதுமண தம்பதியினரும் 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.