அரியலூர்
முதல்-அமைச்சரின் பெயருக்கு அதிகாரிகள் களங்கம் ஏற்படுத்துவதாக தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
|அரியலூர் நகர்மன்ற கூட்டத்தில் முதல்-அமைச்சரின் பெயருக்கு அதிகாரிகள் கலங்கம் ஏற்படுத்துவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
நகர்மன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம்
அரியலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகர்மன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் சாந்திகலைவாணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் அரியலூர் நகராட்சியில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. மழைக்காலங்களில் தெருக்களில் ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் சில பகுதிகளில் சாக்கடை நீர் தெருக்களில் வழிந்து ஓடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுபோல் எந்த ஒரு பணியினையும் நகராட்சி நிர்வாகம் செய்வதில்லை. மேலும் நகர் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் மறுப்பதாகவும் கூறி தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் குற்றம் சாட்டி கூச்சலிட்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகள் செயல்படுவதாக தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
குற்றச்சாட்டு
கூட்டத்தின்போது பேசிய தி.மு.க. கவுன்சிலர் ராஜேஷ், தேவையான உபகரணங் களை கொடுங்கள் அரியலூர் தி.மு.க. கவுன்சிலரான நான், என் மனைவி, என் அப்பா எல்லோரும் சென்று குப்பை, சாக்கடையை அள்றோம் என தெரிவித்தார். தொடர்ந்து அவர் நகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ளப்படுவதில்லை என குற்றம் சாட்டினார்.
அப்போது தி.மு.க. உறுப்பினர்களான புகழேந்தி, கண்ணன், அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெங்கடாஜலபதி, இஸ்மாயில் உள்ளிட்டோர் எழுந்து நின்று, தங்களது பகுதிகளில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால், தற்போது பெய்த மழையில் மழைநீருடன் கழிவுநீர் தெருக்களில் சூழ்ந்துள்ளது. இதனால் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் வார்டு பகுதிகளில் சரிவர குப்பைகள் அள்ளப்படுவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தொடர்ந்து, திருச்சி சாலையில் உள்ள பாதாள சாக்கடை நீரேற்று நிலையத்திலிருந்து தற்காலிக பஸ் நிலையம் வரை தெருவிளக்குகள் அமைப்பது, 1 முதல் 18 வார்டுகளிலும் சேதமடைந்து சிறுபாலங்களை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் அமைப்பது, தேவையான இடங்களில் மழைநீர் வடிக்கால் வசதிகளை ஏற்படுத்தி தருவது என்பன உள்பட மொத்தம் 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.