தமிழகத்தில் திமுக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
|தமிழகத்தில் திமுக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
குத்தாலம்,
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பெரம்பூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் பி.வி.பாரதி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மாவட்ட மகளிரணி செயலாளர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.
இதில், பெரம்பூர், சேத்தூர், அனந்தநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தி.மு.க மூத்த நிர்வாகி ஜெயபால் தலைமையில் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் 150 பேர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியன் பேசுகையில்,
திமுக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் குறுவை பருவத்துக்கு பயிர்க்காப்பீடு அறிவிக்கப்படவில்லை. குறுவைக்கு தேவையான யூரியா தட்டுப்பாடு என்கிற நிலையை தாண்டி முற்றிலும் இல்லை என்கிற நிலைக்கு சென்றுவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.