மதுரை
தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை-ஜி.கே.வாசன் பேச்சு
|தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என மதுரையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.
தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என மதுரையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.
பொதுக்கூட்டம்
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. நகர் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் காந்தி, வடக்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அரசியல் களத்தில் சிறப்புமிக்க இடமாக மதுரை திகழ்ந்து வருகிறது. எல்லாத் துறையிலும் மதுரை சிறப்பாக செயல்பட காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் நேசித்த மண் மதுரை. நேர்மை, தூய்மை, வெளிப்படை தன்மை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு காமராஜர். அதுபோல்தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், தூய்மை, நேர்மை, வெளிப்படை தன்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்.
இளைஞர்களின் வாழ்க்கை
மத்திய அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாக உலக நாடுகள் கொரோனாவை கண்டு அஞ்சிய சமயத்தில் மற்ற நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக திகழ்ந்தது. தமிழகத்தில் தி.மு.க.வின் ஒரு வருட ஆட்சி நிறைவு பெற்றுள்ளது. ஆனால் மக்களின் எந்த ஒரு எண்ணங்களையும் பிரதிபலிக்காத ஆட்சி தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான செயலில் தி.மு.க. ஈடுபட வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளை பழி வாங்கும் நோக்கத்தில் செயல் பட்டு வருகிறது. காமராஜர் படிக்க வைத்தார். ஆனால் இந்த அரசு இளைஞர்களை குடிக்க வைக்கிறது. ஏழை எளிய மக்களின் வருமானம் டாஸ்மாக் மூலம் பறிக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் 2200 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா தமிழகத்தை நாசமாக்கி வருகிறது.
ஆன்லைன் சூதாட்டம்
இதுபோல் ஆன்லைன் சூதாட்டமும் அதிகரித்துள்ளது. இதனை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க அரசு முயற்சி செய்ய வேண்டும். தேர்தல் சமயத்தில் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்ற வில்லை. தாங்கள் வாக்குறுதியில் என்ன கொடுத்தோம் என்பதை தி.மு.க. மீண்டும் ஒருமுறை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே. ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பைரவ மூர்த்தி, நடராஜன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜி.கே. வாசனுக்கு மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.