சேலம்
இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. நிர்வாகி தீக்குளித்து உயிர்விட்டார்
|இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூர் அருகே தி.மு.க. நிர்வாகி ஒருவர் தீக்குளித்து உயிரை விட்டார். அவரது உடலுக்கு அமைச்சர் கணேசன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேட்டூர்,
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூர் அருகே தி.மு.க. நிர்வாகி ஒருவர் தீக்குளித்து உயிரை விட்டார். அவரது உடலுக்கு அமைச்சர் கணேசன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
தி.மு.க. நிர்வாகி
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தாழையூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 82). இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே தி.மு.க. உறுப்பினராக இருந்துள்ளார். நங்கவள்ளி ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராகவும் இருந்தவர்.
நேற்று காலை தாழையூர் கிராமத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்துக்கு தங்கவேல் சென்றார். அங்கு இந்தி திணிப்பை எதிர்த்து, தான் எழுதிய அறிவிப்பு பலகையை வைத்தார்.
தீக்குளித்து உயிர்விட்டார்
பின்னர் தான் தயாராக கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி திடீரென்று தீக்குளித்தார். இதனால் தீ உடல் முழுவதும் மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடல் கருகியதால் அவர் அலறித்துடித்தார். உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் கட்சி அலுவலகம் முன்பே தங்கவேல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தி வேண்டாம்
தீக்குளிப்பதற்கு முன்பு தங்கவேல் எழுதி வைத்திருந்த அறிவிப்பு பலகையில், மத்திய அரசே இந்தியை திணிக்காதே, இந்தி வேண்டாம். தாய்மொழி தமிழ் இருக்கும்போது, கோமாளி எழுத்தான இந்தி மாணவ-மாணவிகளின் வாயில் நுழையாது. வேலை வாய்ப்பை பாதிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். இவர் தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு உள்ளார். மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கையில் பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு தங்கவேலின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன், மாவட்ட செயலாளர்கள் செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் சதாசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கோபால், நங்கவள்ளி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மடத்துப்பட்டி சின்னு என்கிற அர்த்தநாரீஸ்வரன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
ரூ.1 லட்சம் உதவி
தி.மு.க. சார்பில் தங்கவேலின் இறுதிச்சடங்கிற்காக ரூ.1 லட்சம் நிதி உதவியை அமைச்சர் கணேசன், அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இறந்த தங்கவேலுவுக்கு ஜானகி என்ற மனைவியும், கல்யாணி என்ற மகளும், மணி, ரத்தினவேல் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
தங்கவேல் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு தனியாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரிகிறது. அந்த கடிதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும் என்று மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி தெரிவித்தார்.
இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. நிர்வாகி தீக்குளித்து உயிர் இழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.