பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது தி.மு.க. நிர்வாகி தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்
|தி.மு.க. நிர்வாகி ராஜீவ் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று,தி.மு.க. நிர்வாகி ராஜீவ் காந்தி என்ற நபர், பெண் கிராம நிர்வாக அலுவலர், சகோதரி சாந்தி அவர்களை, கன்னத்தில் அறைந்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது மிருகத்தனமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாட்டாளி மக்கள் கட்சி சகோதரர்கள், தேர்தல் பிரச்சார விதிகளை மீறியதாகப் பொய்ப் புகார் அளிக்க மறுத்ததால், அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நாளன்று, இந்தக் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறார் தி.மு.க. நிர்வாகி ராஜீவ் காந்தி.
ஆட்சிக்கு வரும் முன்னர், தெருத் தெருவாகச் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த முதல்-அமைச்சர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, தனது கட்சியினரைச் சிறிய அளவில் கூட கண்டிக்காதது தான், அரசு அதிகாரிகளுக்கு, குறிப்பாக, பெண் அதிகாரிகளுக்கு எதிரான தி.மு.க.வினரின் தொடர் அராஜகத்திற்குக் காரணம்.
பெண் கிராம அலுவலரை எட்டி உதைத்துத் தாக்கிய தி.மு.க. நிர்வாகி ராஜீவ் காந்தியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .என்று தெரிவித்துள்ளார்.