சென்னை
சென்னை மாநகராட்சியின் தி.மு.க. கவுன்சிலர் சரஸ்வதி உடல்நல குறைவால் மரணம்
|சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சரஸ்வதி உடல்நல குறைவால் மரணமடைந்தார்.
சென்னை துறைமுகம் மேற்கு பகுதி தி.மு.க. துணைச் செயலாளர் சரஸ்வதி (வயது 55). இவருடைய கணவர் கருணாநிதி. இவர்களுக்கு சூர்யா என்ற மகனும், துர்காதேவி என்ற மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சரஸ்வதி, திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 59-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. கட்சி வேட்பாளராக சரஸ்வதி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சரஸ்வதி மரணமடைந்தார். சரஸ்வதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி இறந்த தகவலை கேட்டதும் ஆஸ்பத்திரி வளாகத்தில் தி.மு.க. கட்சியினர், உறவினர்கள் திரளாக கூடினர்.
சரஸ்வதியின் மறைவு தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'பெருநகர சென்னை மாநகராட்சி 59-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இறப்பு நமக்கும், தி.மு.க.விற்கும், எஸ்.எம். நகர் உள்பட 59-வது வார்டு பகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. 153 வார்டுகளில் தி.மு.க., 15 வார்டுகளில் அ.தி.மு.க., 13 வார்டுகளில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, 4 வார்டுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் 122-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஷிபா வாசு, 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர்.
கடந்த 7-ந் தேதி சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தின பேரணியில் பங்கேற்ற 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மாரடைப்பால் காலமானார். இந்த சூழ்நிலையில் நேற்று 59-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சரஸ்வதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார்.
இதனால் சென்னை மாநகராட்சியில் தற்போது 4 வார்டுகள் காலியாகிவிட்டன. எனவே மாநகராட்சி மாமன்ற செயலாளர் சார்பில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு காலியாக உள்ள 4 வார்டுகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.