காஞ்சிபுரம்
சுங்குவார்சத்திரம் அருகே தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கைது
|சுங்குவார்சத்திரம் அருகே தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா டோமினிக். இவருடைய மகன் ஆல்பர்ட் (வயது 30). இவர் ஶ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக இருந்தார். இவர் அங்கு இருக்கக்கூடிய 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் எடுக்கும் பணி செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி எச்சூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகில் காலி இடத்தில் குடிசையில் ஆல்பர்ட் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி முகம் மற்றும் தலை பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் யார்? கூலி படை கும்பலா? அல்லது இவர்களுக்கு தொடர்புடைய நபர்களா? என போலீசார் தனி படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரனவ் (வயது 20), மண்ணிவாக்கம் ஆறுமுகம் (21), மேற்கு தாம்பரம் தினேஷ்குமார் (21) ஆகியோர் தாம்பரம் கோர்ட்டில் சரணடைந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் 3 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைவதற்கு செல்லும் தகவல் தனி படை போலீசாருக்கு கிடைத்தது. தனி கோர்ட்டு வாசலில் வைத்து தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
3 பேரும் தாம்பரம் பகுதியை சேர்ந்த 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.