திருச்சி
கூட்டுறவு சங்க தேர்தலில் பங்கேற்க தி.மு.க.வினர் உறுப்பினராக வேண்டும்; செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
|கூட்டுறவு சங்க தேர்தலில் பங்கேற்க தி.மு.க.வினர் உறுப்பினராக வேண்டும் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
செயல்வீரர்கள் கூட்டம்
திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர்கள் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர்கள் ராமலிங்கம் எம்.பி., கோவி செழியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் தி.மு.க.வினர் முழுமையாக பங்கேற்கும் வகையில் அனைத்து சங்கங்களிலும் உறுப்பினராக சேர விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விரைவில் அந்தந்த சங்கங்களில் ஒப்படைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற உள்ள புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய அடுத்த மாதம் நடைபெறும் சிறப்பு முகாமின் போது அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் தி.மு.க.வினர் அனைவரும் பங்கேற்று புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்
கூட்டத்தில் மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி உள்பட திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.