< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்றத்திற்கு வெளியே 8ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் - டி.ஆர்.பாலு அறிவிப்பு
மாநில செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு வெளியே 8ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் - டி.ஆர்.பாலு அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Feb 2024 12:50 PM IST

நாடாளுமன்றத்திற்கு வெளியே மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதன்பின், நேற்று முன்தினம் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், ஜார்கண்ட் முதல்வர் விவகாரம், சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வருகிற 8ம் தேதி நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ள காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்வதாக தி.மு.க.வினார் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்