திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் வேலை செய்த இளம் பெண்ணுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டு - அண்ணாமலை கண்டனம்
|விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.
உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.