மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி வரப்போகிறது - அதிரடி கிளப்பிய அதிமுக எம்.பி. சிவி சண்முகம்
மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி வரப்போகிறது - அதிரடி கிளப்பிய அதிமுக எம்.பி. சிவி சண்முகம்

தினத்தந்தி
|
18 Dec 2022 8:12 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி வரப்போகிறது என்று அதிமுக எம்.பி. சிவி சண்முகம் பரபரப்பான கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம், நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக அருகில் உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட கிராம மக்கள், உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிலத்தை வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று மந்தாரக்குப்பத்தில் சுரங்கம் 2- முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்.பி.யும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான சி.வி. சண்முகம் பங்கேற்றார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிவி சண்முகம் பேசியதாவது:-

தற்போது என்.எல்.சி.யில் உள்ள 11 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களில் 1800 பேர் மட்டுமே தமிழர்கள். மற்றவர்கள் வடமாநிலத்தவர். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம், பீகாரில் உள்ள ஒரு மாவட்டமாக மாறிக்கொண்டுள்ளது.

இந்தியாவிலே பொறியாளர்கள் அதிகம் படித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் தான் இருக்கின்றது இவர்களுக்கு ஏன் இந்நிறுவனத்தில் வேலை கொடுக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் பாஜக மந்திரி அருகில் அமர்ந்துள்ளனர். இது தான் திமுகவின் சமுக நீதியா. கடந்த 2 நாட்களுக்கு முன் நாடாளுமன்ற அவையில் இருந்தேன். ரெயில்வே துறையை எதிர்த்து திமுக எம்.பி. கனிமொழி ஒரு கேள்வி கேட்டார். இந்த கனிமொழி (முதல்-அமைச்சர் ஸ்டாலின் தங்கை) அல்ல இன்னொருவர்.

அவர் ஒரு கேள்வி கேட்டார். அவர் கேள்வி கேட்ட திமுக எம்.பி.க்கள் தலைவர் திருச்சி சிவா உடனே மத்திய ரெயில்வே மந்திரி அருகே சென்று அமர்ந்துகொண்டு கோவித்துக்கொள்ளாதீர்கள்... அது ஒன்றுமில்லை என சென்று சொல்கிறார். ஒரு கேள்வி கேட்டுவிட்டார்... நீங்கள் ஒன்றும் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். திமுக எம்.பி.க்கள் டெல்லியில் பாஜகவை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வீர வசனம் பேசுகின்றனர்.

இது தெரியாமல் விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள்... திமுக உங்களை கழற்றி விடப்போகிறது. நட்டாற்றில் தென்பெண்ணை ஆற்றில் ஓடப்போகிறீர்கள் நீங்கள் எல்லாம்... நாடாளுமன்ற தேர்தல் வரும்போது திமுகவும், பாஜகவும் கூட்டணி வரப்போகிறது. அது (திமுக-பாஜக கூட்டணி) நடக்கப்போகிறது.

பாஜக என்ன கூறுகிறது (திமுகவிடம்) ஒன்று என்னுடன் கூட்டணி வையுங்கள் இல்லையென்றால் காங்கிரசுடன் கூட்டணி வைக்காதே கழற்றி விட்டுவிடு பரவா இல்லை... ஆட்சிக்கு வந்த உடன் நீங்கள் வாங்க உங்களுக்கு நான் அமைச்சரவை பதவி கொடுத்து விடுகிறேன் என்கிறது. இவர்கள் (திமுக) என்ன செய்கிறார்கள்... எங்களுக்கு அமைச்சரவை கொடுத்தால் போதும் என்றார்... ஆகவே இரண்டு பேரும் (திமுக, பாஜக) ஒன்றுதான். அவர்கள் (பாஜக) காவித்துண்டு போட்டுக்கொண்டுள்ளனர்... இவர்கள் (திமுக) கருப்பு-சிவப்பு துண்டு போட்டுள்ளனர். இரண்டும் (திமுக-பாஜக) ஒன்றுதான்' என்றார்.

மேலும் செய்திகள்