வீட்டிலேயே சாராயம் தயாரித்து விற்ற தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் குண்டர் சட்டத்தில் கைது
|வீட்டிலேயே தயாரித்து சாராயம் விற்ற தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், கடந்த மாதம் 18-ந்தேதி திண்டிவனம் நத்தமேடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்ததில் காருக்குள் ஏராளமான சாராய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே காரில் வந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் திண்டிவனம் நத்தமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் மரூர் ராஜா என்கிற ராஜா (வயது 38) என்பதும், இவருடைய மனைவி ரம்யா திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் மரூர் ராஜா, தனது வீட்டிலேயே சாராயத்தை தயாரித்து அதனை பாக்கெட்டுகளில் அடைத்து திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி சென்றபோது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து மரூர் ராஜாவை போலீசார் கைது செய்து திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர். தற்போது மரக்காணம் பகுதியில் விஷ சாராயம் குடித்து விழுப்புரம்- செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சாராய வியாபாரிகளை களையெடுக்கும் வகையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மரூர் ராஜா மீது சாராய விற்பனை, கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் இருக்கிற நிலையில் அவர் தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதால் அவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின்பேரில் நேற்று மரூர் ராஜா குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.