ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சியை எதிர்த்து ஆட்சியை இழந்தது தி.மு.க: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
|நாட்டில் ஜனநாயகத்தின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
"நாட்டில் ஜனநாயகத்தின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்கக் கூடாது என டெல்லியில் இருந்து தூது வந்தது. ஆனால் ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சியை எதிர்த்து, அதற்காக தி.மு.க. தனது ஆட்சியை இழந்தது.
எமர்ஜென்சியின்போது ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியவர் கலைஞர் கருணாநிதி. நாங்கள் ஆட்சியை நம்பி இல்லை, ஜனநாயகத்தை நம்பி இருக்கிறோம் என்றும், உயிரே போனாலும் எமர்ஜென்சியை எதிர்த்து நிற்போம் என்றும் கலைஞர் கூறினார்.
தற்போது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, மக்களாட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எனவே எதிர்கட்சிகளை மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற பணிகளில் பா.ஜ.க. ஈடுபடுகிறது. இந்தியாவை காப்பாற்றுவதற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.