சென்னை
துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க. பிரமுகர் உடல் 51 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
|சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க. பிரமுகர் உடல் 51 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சக்கரபாணி (வயது 65). தி.மு.க. பிரமுகரான இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
சென்னை ராயபுரம், கிரேஸ் கார்டன், 3-வது தெருவை சேர்ந்தவர் தமீம் பானு (40). இவரது வீட்டில் கடந்த மே மாதம் சக்கரபாணி துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் பாகங்கள் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. தலையை காணவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தமீம் பானு (40), அவரது தம்பி வாஷிம் பாஷா (38) மற்றும் டில்லி பாபு ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் சக்கரபாணியின் தலையை அடையாறு ஆற்றில் வீசியதாக கொலையாளிகள் தெரிவித்தனர். தலையை போலீசார் அடையாறு ஆற்றில் தொடர்ந்து தேடி வந்தனர். இதனையடுத்து 51 நாட்கள் ஆகியும் தலை கிடைக்காததால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.