< Back
மாநில செய்திகள்
ஒட்டுண்ணி அரசியலின் அடையாளம் தி.மு.க.தான் - அன்புமணி ராமதாஸ் காட்டம்
மாநில செய்திகள்

ஒட்டுண்ணி அரசியலின் அடையாளம் தி.மு.க.தான் - அன்புமணி ராமதாஸ் காட்டம்

தினத்தந்தி
|
21 March 2024 8:18 AM GMT

சமூகநீதிக்கான தி.மு.க.வின் பங்களிப்பு பரங்கிமலையை விட குட்டையானவை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக போற்றப்படும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சேலம் தொடர்வண்டிக் கோட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தது தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தான் என்ற இமாலயப் பொய்யை, தி.மு.க. நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது. பா.ம.க.வின் சாதனைகளுக்கு தி.மு.க. சொந்தம் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள தி.மு.க. முயல்வது அப்பட்டமான ஒட்டுண்ணி அரசியல் ஆகும். செய்யாததை செய்ததாக போலி பெருமை பேசுவதற்கு தி.மு.க. வெட்கப்பட வேண்டும். பிறரின் சாதனைகளுக்கு தி.மு.க. முத்திரைக் குத்திக் கொள்வது இது முதல் முறையல்ல.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டைப் போராடிப் பெற்றுத் தந்தது பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பது சமூகநீதி வரலாற்றில் பொறிக்கப்பட்ட உண்மை ஆகும். அதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பல்லாண்டு காலம் போராட்டம் நடத்தியது.

தாம்பரம் தேசிய சித்த மருத்துவர் நிறுவனத்தைக் கட்டியெழுப்பி திறப்பு விழா நடத்தியதும், அதன் மருத்துவமனைக்கு அயோத்திதாசப் பண்டிதரின் பெயரைச் சூட்டியதும் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த நான் தான். சேலத்தில் ரூ.139 கோடியில் எய்ம்சுக்கு இணையான அதிஉயர் சிறப்பு மருத்துவமனையைக் கொண்டு வந்ததும் மத்திய சுகாதார அமைச்சராக பணியாற்றிய நான் தான்.

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தொடர்வண்டிக் கோட்டம் அமைக்க வேண்டும் என்பது தந்தைப் பெரியாரின் கனவு ஆகும். அந்தக் கனவை மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைப்படி நிறைவேற்றி வைத்தவர் அப்போதைய தொடர்வண்டித்துறை அமைச்சர்களான ஏ.கே.மூர்த்தியும், அரங்க.வேலுவும்தான். மேற்கண்ட திட்டங்களுக்காக தி.மு.க. ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. பா.ம.க.வின் சாதனைகளை தன்னுடையதாகக் கூறி அரசியல் பிழைப்பு நடத்தும் தி.மு.க.வுக்கும், இன்னொரு உயிரினத்தை சார்ந்து அதன் உணவை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இப்படி ஒரு அரசியலை தி.மு.க. நடத்தக் கூடாது.

சமூகநீதியில் பா.ம.க. படைத்துள்ள சாதனைகள் இமயமலையை விட உயரமானவை; சமூகநீதிக்கான தி.மு.க.வின் பங்களிப்பு என்பது பரங்கிமலையை விட குட்டையானவை. இந்தியாவில் 6 மாநிலங்களில் சாத்தியமாக்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த முன்வராத தி.மு.க.வுக்கு, சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்ட பிறகும் தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்காமல் வன்னியர்களுக்கு துரோகம் செய்த திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

சமூகநீதி குறித்து பேசுவதற்குக் கூட தகுதி இல்லாத தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி படைத்த சமூகநீதி சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாட முயல்வதற்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவர் என்பது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்