< Back
மாநில செய்திகள்
அதானி விவகாரத்தில் வாய் திறந்த ஒரே இயக்கம் திமுக தான் - ஆ.ராசா எம்.பி பேச்சு
மாநில செய்திகள்

அதானி விவகாரத்தில் வாய் திறந்த ஒரே இயக்கம் திமுக தான் - ஆ.ராசா எம்.பி பேச்சு

தினத்தந்தி
|
10 April 2023 9:41 AM IST

அதானி விவகாரத்தில் வாய் திறந்த ஒரே இயக்கம் திமுக தான் என்று ஆ.ராசா எம்.பி கூறினார்.

புதுக்கோட்டை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் திருக்கோகர்ணத்தில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் துணை பொதுசெயலாளர் ஆ.ராசா எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா காலம், மழை வெள்ளம் என பல்வேறு இடர்பாடுகளை முன்னின்று எதிர்கொண்டு தீர்த்து வைத்தார். அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது ரூ.6 லட்சம் கோடி கடனில் தமிழகம் இருந்தது.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கவில்லை, கருணாநிதிக்கு ஏன் ரூ.80 கோடியில் நினைவு சின்னம் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களுக்கு கையெழுத்திட்ட கருணாநிதிக்கு பேனா சின்னம் வைக்க கூடாதா?. வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ளவர்களின் சதவீதம் தமிழகத்தில் தான் குறைவு.

அதானி விவகாரத்தில் ரூ.10 லட்சம் கோடி முறைகேடு நடந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன்?. அமலாக்க துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு பயந்து மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா, பஞ்சாப் முதல்-மந்திரிகள் யாரும் பேசவில்லை. இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான். அதன் தலைவர் மு.க.ஸ்டாலின்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்