< Back
தமிழக செய்திகள்
சமூக நீதி, சுயமரியாதை ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கக்கூடிய இயக்கம் தான் திமுக - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக செய்திகள்

சமூக நீதி, சுயமரியாதை ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கக்கூடிய இயக்கம் தான் திமுக - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
25 Sept 2022 12:16 PM IST

வகுப்புரிமை எனப்படும் இடஒதுக்கீடு அனைவருக்கும் சம விகிதத்தில் தரப்பட்டு வருகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

கனடாவில் நடைபெற்ற சமூக நீதிக்கான பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாட்டில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக்கொள்கை என்பது மனிதநேயமும், சமூக நீதியும் தான். அனைத்து இடங்களிலும் சமூக நீதியை நிலைநாட்டி வருகிறோம். வகுப்புரிமை எனப்படும் இடஒதுக்கீடு அனைவருக்கும் சம விகிதத்தில் தரப்பட்டு வருகிறது.

எண்ணற்ற சமூக நீதி திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேலும் உச்சத்திற்கு கொண்டு வரவே திராவிட மாடல் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கக்கூடிய இயக்கம் தான் திமுக. எங்களின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி, சமுக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.

வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இல்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும்.

இந்தியாவின் பிற மாநிலங்களை ஆளும் அரசுகள் தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அறிவதில் ஆர்வமாக உள்ளனர். தங்கள் மாநிலத்தில் நடைமுறைபடுத்துவதில் துடிப்புடன் உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்